Tuesday, October 25, 2011

எதை நாடுகிறோம்?


எதை நாடுகிறோம்? 
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். -  (மத்தேயு 6:33).


நம் ஒவ்வொருவருடைய விருப்பங்களும் நமது வயதுக்கும், நாம் இருக்கும் நிலவரத்திற்கும் தக்கதாக வேறுபடுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள நல்ல மதிப்பெண்கள் பெற்று தங்களுக்கு நல்ல வேலையை பெற்று தரக்கூடிய தொழிற்கல்வி கற்க்க விரும்புகின்றனர். படித்து முடித்தவர்கள் அதிக வருமானத்தை தரக்கூடிய நல்ல வேலையில் சேர பிரும்புகின்றனர். நல்ல வேலையில் சேர்ந்தவர்கள் வெளிநாடு சென்று அதிக பணம் சம்பதிக்க விரும்புவர். இப்படி நல்ல வேலை, நல்ல வாழ்க்கை துணை, நல்ல வீடு என்று நம்முடைய விருப்பங்கள் விரிந்து கொண்டே போகின்றன. 'எனக்கு' இவையெல்லாம் வேண்டும் என்று இன்னும் பல விருப்பங்கள் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் உண்டு.

ஆனால் 'என்னில்' இவையெல்லாம் வேண்டுமென்று நாம் எவற்றை எல்லாம் விரும்புகிறோம்? தாவீது கொல்கிறார், 'தேவனே சுத்த இருதயத்தை 'என்னிலே' சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். ஈசோப்பினால் என்னை சுத்திகரியும்' என்று தாவீது தன்னிலே பெற்று கொள்ள வேண்டியவற்றிற்காக ஜெபிக்கிறார். ஆனால் அவர் பாவத்தில் விழுந்து விட்டபின்பே இந்த ஜெபத்தை ஏறெடுத்தார். நாம் பாவத்தில் விழுந்து விடாதபடிக்கு அனுதினமும் காலையில் எழுந்தவுடன் இந்த ஜெபத்தை ஏறெடுக்க பழகி கொண்டால்  நம்மை பாவத்தில் விழாதபடி தேவன் காத்து கொள்வார்.

நம்முடைய ஜெபத்திலே அதிக பாரத்தையும், நேரத்தையும் எடுப்பது 'எனக்காகவா' அல்லது 'என்னிலே' மாற்றம் கொண்டு வாரும் என்று ஜெபிப்பதற்காகவா? என் கடன் பாரம் தீர வேண்டும், என் வீடு கட்டி முடிக்க உதவும், என் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும், என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், எனக்கு நல்ல துணை கிடைக்க வேண்டும் என்பது தானே நம் ஜெபத்தில் அதிகம்! ஆனால் தாவீதை போல தேவனே என்னில் மாற்றம் தாரும் என ஜெபிப்பவர்கள் வெகு சிலரே. என்னில் தாழ்மையை தாரும், பொறுமையாயிருக்க செய்யும், அன்பு நிறைந்த உள்ளத்தை என்னிலே சிருஷ்டியும் என நமக்குள் ஏற்பட வேண்டிய மாற்றத்திற்காக நாம் அதிகமாக ஜெபிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நமது ஒவ்வொரு அவயவங்களையும் கர்த்தருடைய பலிபீடத்தில் வைத்து அவர் நம்மை பரிசுத்தப்படுத்தும்படி மன்றாடுவோம். அந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் ஆண்டவரின் நினைவாய் இருக்க ஜெபிப்போம். நம் வாயின் வார்த்தைகளெல்லாம் பிறர் காயம் ஆற்ற கூடியதாக இருக்க ஜெபிப்போம்.

பிரியமானவர்களே, அன்று சாலொமோன் ராஜா இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த ஞானமுள்ள இருதயத்தை மட்டும்தான் கேட்டான். ஆனால், தேவன் அவன் கேளாத மற்ற எல்லா ஐசுவரியங்களையும் அவனுக்கு கொடுக்கவில்லையா? அதுபோல நமது எண்ணமும் 'எனக்கு எனக்கு' என்றிராதபடி 'என்னிலே' என்று ஜெபிக்கிறவர்களாய் மாறுவோம். சுத்திகரிக்கப்பட்ட பாத்திரத்திலே எவரும் பாலை ஊற்றுவார்கள். இல்லாவிட்டால் பாத்திரத்திலுள்ள அசுத்தம் பாலை கெடுத்து விடும். அதுபோல நம்மை சுத்தமாக காத்து கொள்வோமானால், நமக்கு வேண்டிய ஆசீர்வாதங்கள் தானாய் வந்து நம் வாழ்வை நிரப்பும். நமது சரீரத்திற்காக அல்ல, ஆத்துமாவிற்காக கவலைப்படுவோம். சரீரத்தின் தேவைகளை தேவன் பார்த்து கொள்வார். ஆமென் அல்லேலூயா!

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்
..
கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்
  

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் எங்கள் சரீர தேவைகளுக்காக மாத்திரம் ஜெபிக்கிறவர்களாக இல்லாதபடி, எங்கள் ஆத்தும ஈடேறும்படியாக ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். எங்கள் உள்ளான மனிதன் பெலப்படும்படியாக, ஆவியின் கனி எங்களில் காணப்படும்படியாக நாங்கள் எங்கள் ஆத்துமாவை ஒவ்வொரு நாளும் உம்முடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். முதலாவது தேவனுடைய ராஜயத்தை தேடுங்கள், மற்றவை கூட கொடுக்கப்படும் என்றீரே, முதலாவது உமது ராஜ்யத்திற்கடுத்தவைகளை தேட கிருபை தருவீராக. அதினால் சரீர தேவைகளை பெற்று கொள்ள கிருபை செய்வீராக.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


http://www.anudhinamanna.net/

No comments:

Post a Comment